திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.40 திருவாழ்கொளிபுத்தூர் (திருவாளொலிபுத்தூர்) பண் - தக்கராகம் |
பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப்
பூதகணம் புடை சூழக்
கொடியுடை யூர்திரிந் தையங்
கொண்டு பலபல கூறி
வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமல ரிட்டுக்
கறைமிடற் றானடி காண்போம்.
|
1 |
அரைகெழு கோவண ஆடையின் மேலோர்
ஆடரவம் அசைத் தையம்
புரைகெழு வெண்டலை யேந்திப்
போர்விடை யேறிப் புகழ
வரைகெழு மங்கைய தாகமொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரைகெழு மாமலர் தூவி
விரிசடை யானடி சேர்வோம்.
|
2 |
பூண்நெடு நாகம் அசைத்தன லாடிப்
புன்றலை யங்கையி லேந்தி
ஊணிடு பிச்சையூ ரையம்
உண்டி யென்று பலகூறி
வாணெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
தாணெடு மாமல ரிட்டுத்
தலைவன தாள்நிழல் சார்வோம்.
|
3 |
தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை
தாழ்சடை மேலவை சூடி
ஊரிடு பிச்சை கொள்செல்வம்
உண்டி யென்று பலகூறி
வாரிடு மென்முலை மாதொரு பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
காரிடு மாமலர் தூவி
கறைமிடற் றானடி காண்போம்.
|
4 |
கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
காதிலொர் வெண்குழை யோடு
புனமலர் மாலை புனைந்தூர்
புகுதி யென்றே பலகூறி
வனமுலை மாமலை மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
இனமல ரேய்ந்தன தூவி
எம்பெரு மானடி சேர்வோம்.
|
5 |
அளைவளர் நாகம் அசைத்தன லாடி
அலர்மிசை அந்தணன் உச்சிக்
களைதலை யிற்பலி கொள்ளுங்
கருத்தனே கள்வனே யென்னா
(*)வளைபொலி முன்கை மடந்தையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தளையவிழ் மாமலர் தூவித்
தலைவன தாளிணை சார்வோம்.
(*) வளையொலி என்றும் பாடம்.
|
6 |
அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து
வழிதலை யங்கையி லேந்தி
உடலிடு பிச்சை யோடைய
முண்டி யென்று பலகூறி
மடல்நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தடமல ராயின தூவி
தலைவன தாள்நிழல் சார்வோம்.
|
7 |
உயர்வரை யொல்க எடுத்த அரக்கன்
ஒளிர்கட கக்கை யடர்த்து
அயலிடு பிச்சை யோடையம்
ஆர்தலை யென்றடி போற்றி
வயல்விரி நீல நெடுங்கணி பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச்
சயவிரி மாமலர் தூவி
தாழ்சடை யானடி சார்வோம்.
|
8 |
கரியவன் நான்முகன் கைதொழு தேத்த
காணலுஞ் சாரலு மாகா
எரியுரு வாகி யூரையம்
இடுபலி யுண்ணி யென்றேத்தி
வரியர வல்குல் மடந்தையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரிமல ராயின தூவி
விகிர்தன சேவடி சேர்வோம்.
|
9 |
குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யில்
கொள்கை யினார் புறங்கூற
வெண்டலை யிற்பலி கொண்டல்
விரும்பினை யென்று விளம்பி
வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தொண்டர்கள் மாமலர் தூவத்
தோன்றி நின்றான் அடிசேர்வோம்.
|
10 |
கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங்
கரைபொரு காழிய மூதூர்
நல்லுயர் நான்மறை நாவின்
நற்றமிழ் ஞானசம் பந்தன்
வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்
வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்
சொல்லிய பாடல்கள் வல்லார்
துயர்கெடு தல்எளி தாமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |